சிந்தனை சிற்பி சிங்காரவேலர்

தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் ம. சிங்காரவேலர். இந்தியாவில் மே தினத்தை முதல் முதலில் கொண்டாடியவர் சிங்காரவேலர். மாபெரும் சுதந்திரப்போராட்ட வீரர்.

Saturday, May 20, 2006

மருளா? மயக்கமா?

மருளா? மயக்கமா?

ம. சிங்காரவேலர்

சிலர், சூன்யம் வைத்ததாகச் சொல்லும் சில கேஸுகளைத் தாமே கண்டதாகவும், மந்திரத்தால் அந்தக் கே°கள் குணப்பட்டதாகவும், தமது அனுபவத்தால் சூன்யத்தை நம்புவதாகவும், அதன் விஷயமாக இரண்டொரு கே° விவரங்களையும் கூறி, அவை எவ்விதம் நடந்திருக்கக் கூடுமென வினவுகின்றார்கள். இத்தியாதி புராதன நம்பிக்கை விஷயமாக நாம் ஒன்று கவனிக்கவேண்டும். தகுந்த விசாரணையின்றி, ஆராய்ச்சியின்றிக் கண்டதையெல்லாம், கேட்டதையெல்லாம் நம்பவேண்டுமானால், எதையும் சூன்யம், மந்திரம் முதலிய சமாதானமெல்லாம் நிகழும் சம்பவங்களைத் தீர விசாரித்து அறியாமல், கொடுக்கும் வியாக்கியானங்களே, “தும்முவதால், போன காரியம் கெட்டுவிட்டது, அவன் கண்பட்டதால், நோய் வந்தது, காரியம் குணமாயிற்று நரி முகத்தில் விழித்தபடியால்” என்ற இத்தகைய மூட நம்பிக்கைகளை, நடந்த விஷயத்திற்கும், கொடுக்கும் சமாதானத்திற்கும், என்ன சம்பந்தம் என்ற மனப்பான்மையை வளர்ப்பதில்லை. வேடர்கள், நாளொன்றுக்கு அநேக நரிகளைப் பார்க்கின்றார்கள், அவர்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை. போகும் வழியில் சளி பிடித்தவன், ஆயிரந்தடவை தும்முகின்றான். அதனால் அதனைக் கேட்டோர் காரியங்கள் கெட்டுவிட்டதாகத் தெரியவில்லை. கோர்ட்டில் ஜட்ஜுகளை வசியம் செய்ய, மந்திரித்த குங்குமத்தை நெற்றியில் அணிந்து செல்கின்றனர். அவர்கள் கே°கள் சாதாரணமாக ஜெயித்ததாகத் தெரியவில்லை. கிருத்திகை அமாவாசையில் “படுத்தார், தேரார்” என்றும் வழங்குகின்றார்கள்.

ஆனால், மருத்துவமனையில் அந்நாள்களில், நோய் அதிகரிப்பதாகத் தெரியவில்லை. ஆனால், பலர் இத்தியாதி சம்பவங்களில் நம்பிக்கை வைத்துத் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றார்கள். இவைகளால் என்ன தெரிய வருகின்றதென்றால், சாதாரணமாக, சொன்னதையும், கேட்டதையும் நம்புவதே, நமது பழக்கமாய்விட்டது. இதேமாதிரி, பலர் சோதிடத்தையும் நம்புகிறார்கள். கிரகங்களால் நமது வாழ்வு பாதிக்கப்படுகிறதாகச் சிலர் சொல்வதை நாம் நம்புகின்றோம். கோடான கோடி மைல் தூரத்தில் இருக்கும் கிரகங்களுக்கும் நமக்குமென்ன சம்பந்தம்? என்பதை விளக்கிக் காட்டுவார் ஒருவருமில்லை.

சூன்யத்தால், “அது நடந்தது, இது நடந்தது” என்று சொல்வதெல்லாம் நடந்த சம்பவங்களுக்கு நாம் கொடுக்கும் சமாதானங்களாகும். இந்தச் சமாதானங்கள், சரியானவையா, அல்லது கேள்விப் பேச்சா என்பதைத்தான், நிச்சயப்படுத்தவேண்டும். தொந்தரவுபடும் பெண்ணின் தாலி, கழுத்திலிருந்து காணாமலும், திரும்பக் காணப்பட்டதாகவும் வைத்துக் கொள்வோம். இதன் காரணமென்ன? சாமான்ய ஜனங்கள் சூன்யத்தால் இந்தவிதமாகச் சம்பவிக்கிறது என்று சொல்லுகின்றார்கள். இது சரியான காரணமாவென்பதுதான் கேள்வி. அந்தப் பெண்ணின் சேலை திடீரெனத் தீப்பற்றிக் கொள்கிறதாம். கை வைக்கும் பண்டங்களில் மலம் தோன்றுகின்றனவாம்! இருக்கலாம். ஆனால், அதன் காரணமென்ன? மந்திரத்தாலா, அல்லது நாம் பொறுமையுடன் கவனிக்காத தோஷத்தால் இவ்வித சமாதானத்தைக் கொடுக்கின்றோம்.

கோபத்தில் தாலியைக் கழற்றியெறியும் பெண்கள் அநேகரைப் பார்த்திருமிருக்கின்றோம். இந்தப் பெண்கள் சூன்யத்தால் செய்கின்றார் களென்றாகிலும், பேய் பிடித்துச் செய்கின்றார் களென்றாகிலும், யாரும் சொல்வதில்லை. சில வியாதியுடையவர்கள், தங்கள் சேலையைக் கொளுத்திக் கொள்கின்றார்கள். மன வெறுப்பாலும் இந்தக் காரியத்தைச் செய்கின்றார்கள். பைத்தியம் முதலிய மன வெறுப்பால் தன் மலத்தைக் கையாளும் நோயாளியைப் பார்த்துமிருக்கின்றோம். இந்தக் கே°களில், பில்லி சூன்யமென்றும் யாரும் நம்புவதில்லை. சாதாரணமாகக் கோபத்தாலோ மன வெறுப்பாலோ, மன மாறுதலால் நிகழ்வதாக நிர்ணயிக்கின்றோம். நாம் பார்த்த காரியங்கள் ஜன்னி நோயால் நேருவது சகஜம். இவைகளைவிட ஆச்சரியமான காரியங்கள், ஜன்னி நோயால் பீடிக்கப்பட்டோர் செய்கின்றார்கள். குழந்தைகள், மலத்தைப் பூசிக்கொள்வதை அறிவின்மையால் என்று சொல்லுகின்றோம். ஆனால், அறிவை இழந்த முதியோர் செய்தால், அதை சூன்யத்தால் என்கின்றோம். ஏனெனில், குழந்தைகள் செய்வது தினக்காட்சி, முதியோர் செய்வது அபூர்வம்!!!நரம்பைப்பற்றிய வியாதி மிகுதியும் பெண்களுக்கு வருவதுண்டு. அந்தவேளையில் பல அசங்கிதனமான காரியங்களைச் செய்வார்கள். தங்கள் புடவையைக் கழற்றி எறிந்துவிடுவார்கள். கொளுத்திக் கொள்வார்கள். தங்கள் எச்சில், மலம் முதலிய வ°துகளை, வீசி எறிவார்கள். கண்டபடி எல்லாம் பேசுவார்கள். நரம்புபற்றிய வியாதி மருத்துவமனைகளில், இவர்கள் கோராமையைக் காணலாம். இதற்கு வைத்திய வல்லுநர்களால்தான் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். இந்த நோய்களுக்கு மருத்துவமனைகளில், மந்திரங்கள் செய்வதில்லை.

மணி மந்திரங்கள், அறியாதாரிடத்தும், அநாகரீகரிடத்துமே காணலாம். இத்தியாதி நடவடிக்கைகளை வைத்தியர்களைக் கொண்டு பார்வையிட்டுச் சிகிச்சை செய்வதுதான் புத்திசாலித்தனமாகும். இல்லாவிடில் கெட்டிக்கார லாயர்களை வைத்துக் கேசை நடத்தாமல் நெற்றியில் மந்திரித்த குங்குமத்தை இட்டுக்கொண்டு ஜட்ஜு முன் காட்டுவதையொக்கும். ஒரு காலத்தில் குளிர் சுரமும், அம்மையும் பேதியும், மாரியாத்தா தெய்வங்களால் உண்டாவதாக எண்ணி இருந்தோம். இன்றைக்கும் பல கோடி பாமர மக்கள் நமது நாட்டில் தேவதைகளால் இத்தியாதி வியாதிகள் நிகழ்வதாக எண்ணி மஞ்சள் துண்டும், குங்குமம், மஞ்சளும் அணிகின்றார்கள். இந்த அறியாமையால் லட்சம் லட்சமாக நமது நாட்டு மக்களை இழக்கின்றோம். ஆதலின் அறியாத பெண்கள் செய்வதையும் மோச மந்திரக்காரர் சொல்வதையும் நம்பாமல் தக்க வைத்தியரைக் கொண்டு அவர்களைப் பார்வையிடச் செய்து தெரிந்துகொண்டால் நலமாகும். சிறுவன் திரேகத்தினுள் பல ஊசிகள் இருந்ததாகக் கண்ட காட்சியில் விசேடம் ஒன்றும் நமக்குத் தோன்றவில்லை, ஊசிகள் செத்துப்போன சதையில் அந்த சிறுவனுக்குத் தெரியாமலே பொத்துக் கொண்டிருக்கலாம். சில காலத்திற்குப் பிறகு அந்த இடத்தில் ஏதோ காரணத்தால் ரத்தம் பரவும் ஊசியின் உணர்ச்சி உண்டாயிருக்கலாம். எப்படியெனில் குளோராபாரம் முதலிய உணர்வை நீக்கும் வ°துக்களைக் கொண்டு அச்சமயம் நோய் தெரியாமல் செய்வதுபோல, அச்சிறுவனுக்கு விளையாடுங் காலத்திலோ அல்லது தேக உறுப்பு உணர்ச்சியற்ற இடத்திலோ, அந்த ஊசிகள் பொத்து இருக்கலாம். பிறகு நோய் தொடுத்திருக்கலாம். இவைகளில் அபூர்வமொன்றுமில்லை.

மருத்துவமனையில் தீராமல், மந்திரக்காரனால் தீர்ந்தது என்று சொல்வதில் யாதொன்றும் விசேஷமில்லை. மருத்துவமனையில் எல்லா வியாதிகளும் தீரும் என்பதொன்றுமில்லை. மருத்துவமனை சிகிச்சையால் தீர்த்துக் கொண்டு வந்திருக்கலாம். வீட்டுக்கு வந்த பிறகு, பூரணமாகக் குணமடைந்திருக்கலாம். இந்தத் தருவாயில், மந்திரத்தை மந்திரக்காரன் செய்திருக்கலாம். பிந்தி வந்தவனுக்குக் கிடைத்தது நல்ல பெயர்!!!

பில்லி, சூன்யம், ஏவல், முனி அறைதல், அண்ணமார், கன்னிமார், சேட்டை, காற்று, கறுப்பண்ணன், என்று வழங்கும் சொற்கள் எந்தப் பொருளைக் குறிப்பதாகச் சொல்கின்றவர்களுக்கே தெரியாது. இவை எதுவும் நிச்சயிக்காத சொற்கள். இன்ன காரணமென்று விளங்காத நோய்களுக்கும், செயல்களுக்கும், இந்தச் சொற்களை காரணமாக உபயோகிக்கின்றார்கள். இந்தச் சொற்களைக் கேட்ட மாத்திரத்தில், நடுக்கமுறுகிறார்கள். ஆனால், அவ்வார்த்தைகள் இன்னவை என்று யாரும் பார்த்திலர். அதற்கு ஆடும், கோழியும், முயல் காதும், ஓணானும் தலைச்சன் குழந்தை, கை, கால் விரலும், மஞ்சளும், குங்குமமும் நால் வழிகூடும் இடமும், சுடுகாடும், புறக்கடையும் இன்னும் பல சம்பந்தமில்லா மந்திர தந்திரங்களும் பரிகாரங்களென வழங்குகிறார்கள். இத்தியாதி பித்தலாட்டங்களால் பாமர மக்கள் மயங்கித் தங்கள் பிள்ளைகளைச் சரியான சிகிச்சையின்றிச் சாக வைக்கின்றார்கள், இந்தச் சமூக மோசங்களைத் தடுப்பதற்கு வைத்திய ஞானம் பாமர மக்களுக்குப் பரவச் செய்யவேண்டும். இரண்டாவது ராஜாங்கத்தார் “மத நடுநிலை” என்ற பாசாங்கை விட்டுவிட்டு, பில்லி, சூன்யமென்று ஏமாற்றுகின்றவர்களைத் தண்டிக்கச் சட்ட விதிகள் செய்யவும் வேண்டும்.

நன்றி : விடுதலை

0 Comments:

Post a Comment

<< Home