சிங்காரவேலரும் ஜமதக்னியும் பா.வீரமணி
சிந்தனைச்சிற்பி சிங்காரவேலருடன் பழகியவர்கள் அவரைச் சிறிதும் மறக்க முடியாதென்றும், அவரை நினைத்தாலே உள்ளத்தில் ஒரு தெம்பு ஏற்பட்டு விடும் என்பார் காலஞ்சென்ற தோழர் கே.டி.கே. தங்கமணி அவர்கள். கே.டி.கே தங்கமணியவர்கள் காலமாவதற்குச் சில திங்களுக்கு முன்னர், அவரை யான் பாலன் இல்லத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். இடையில் சிங்காரவேலரைப் பற்றி அவர் பேசத் தொடங்கியதும், அவருடலிலும், உள்ளத்திலும், உடனே ஒரு புத்துணர்ச்சி தோன்றியதைக் கண்டேன். உரையாடலின் இறுதியில் அவரைப் பார்த்து நான் ஒன்று கேட்டேன்; அதாவது, சிங்காரவேலரைப் பற்றிப் பேசத் தொடங்கினால் தங்களுக்கு ஊக்கம் பிறந்துவிடுமோ என்றேன்! அவரும் “ஆம்; அதுதான் உண்மை; அவருடன் பழகியவர்கள் அனைவருக்கும் ஏற்படும் இயல்புதான் அது” என்றார். இது பெரிதும் உண்மை.நாகை கே.முருகேசன், நாகை இராமச்சந்திரன், க.ரா.ஜமதக்னி போன்றோர் தோழர். தங்கமணி கூறுவதற்கு முன்பாகவே அந்த உண்மையைப் பலமுறை என்னிடம் கூறியுள்ளனர். சிங்காரவேலரைப் பற்றிக் கூறும்போது பெரிதும் உணர்ச்சிவயப்படுபவர் நாகை முருகேசன் ஆவார். நினைவு சிறிது மங்கித் தள்ளாடும் வயதிலும், அந்த உணர்வு அவரிடம் இருந்ததை யான் பலமுறை கண்டிருக்கிறேன். சிங்காரவேலரின் இல்லத்தில் இளமைத் தொட்டே அவர் வளர்ந்ததால், அந்த உணர்வு மற்றவர்களைக் காட்டிலும் அவருக்குக் கூடுதலாக இருந்தது போலும்!சிங்காரவேலரிடம் மிக இளம்வயதில் பழகியவர் கே. முருகேசன்; அவர்க்கு அடுத்து இளமையில் பழகியவர்களில் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரும், க.ரா, ஜமதக்னியாரும் ஆவர். 1924 -ஆம் ஆண்டில் சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து நகராண்மைக் கழக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், தெ.பொ.மீ; அப்போது அவருக்கு வயது 24, அதேயாண்டில் யானை கவுனியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிங்காரவேலர்; அவருக்கு அப்போது வயது 64. இருவரும் காங்கிரசு கட்சி உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களிருவருக்கும் நகராண்மைக் கழகத்திலிருந்து நெருங்கிய நட்பு ஏற்படத் தொடங்கியது.ஆனால், ஜமதக்னிக்குச் சிங்காரவேலருடன் ஏற்பட்ட நட்பு விநோதமானது; விந்தையானது.ஜமதக்கனி அவரைச் சந்தித்தபோது அவருக்கு வயது 25. சிங்காரவேலருக்கோ வயது 68.ஜமதக்னி, சிங்காரவேலரைச் சந்தித்தது ஒரு சுவையான செய்தியை உள்ளடக்கியது. அதனை ஜமதக்னி தம் நண்பர்களிடம் பலமுறை கூறியுள்ளார். அச்செய்தி காற்றோடு கலந்துவிடாமல், ஜமதக்னி மொழிபெயர்த்த மூலதன நூலின் முன்னுரையில் அவருடைய மருமகன், பேராசிரியர், முனைவர்.மு.நாகநாதன் அதனைச் சரியாகப் பதிவு செய்துள்ளார். அதனைப் பின்னர் நோக்குவோம்.1960-ஆம் ஆண்டில் வண்ணைத் தியாகராயர் உயர்நிலைப் பள்ளியில் எனக்கு ஜமதக்னி இந்தி ஆசிரியராக இருந்தார். அவர் இந்தி ஆசிரியராக இருந்ததால் நான் அவரிடம் சற்று அந்நியப்பட்டு இருந்தேன். ஆனால் 1964-ஆம் ஆண்டிற்குப் பின், என் இலக்கிய நண்பர்களுடன் அவரை அடிக்கடி சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. அப்போதுதான் அவர் நல்ல தமிழ்ப்புலமை கொண்ட பன்மொழி அறிஞர் என்பதை உணரலானேன். எனது வீட்டிற்கும் அவரது வீட்டிற்கும் 3/4 கி.மீட்டர் தூரம் இருந்ததால், வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் அவரைச் சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.அவரைச் சந்திக்கும்போதெல்லாம் என் நண்பர்களுடன்தான் நான் சந்திப்பேன். அவர்கள் அனைவரும் அவருடைய மாணவர்கள்; அப்போது அவர் அரசியல், இலக்கியம் குறித்து நிரம்பப் பேசுவார். அப்போது தலைவர்கள் பலரைப் பற்றியும் கூறுவார். ஒருமுறை சிங்காரவேலரைப் பற்றிக் கூறும்போது “அவர் ஒரு சிங்கம்; எதற்கும் அஞ்சாதவர்” என்று கூறுவார். இந்தச் சொற்களை அவர் பின்னாளில் பலமுறை கூறியுள்ளார். அக்காலத்தில் எனது நெஞ்சம் இலக்கியம், தற்கால அரசியல் ஆகியவற்றில் மூழ்கியிருந்ததால், சிங்காரவேலரைப் பற்றி மேலும் மேலும் அவரிடம் அறிய நான் தவறிவிட்டேன். இப்போதும் அதனை எண்ணும்போது பெரும் வருத்தமாகவே உள்ளது. அந்த இழப்பு மிகப்பெரிய இழப்பேயாகும்.சரி, அது இருக்கட்டும். ஜமதக்னி சிங்காரவேலரை எப்படிச் சந்தித்தார்? அதுதானே நாம் அறிய வேண்டியது. சிங்காரவேலர் எனும் சிங்கத்தை அவர் சென்னைச் சிறையில்தான் சந்தித்தார். அவர்களிருவரும் எப்படிச் சென்னைச் சிறையில் சந்தித்துக்கொண்டனர்? சென்னைச் சிறையில் அவர்களிருவரும் எப்படிச் சிறைபட்டனர்? அதுவன்றோ நாம் அறிய வேண்டிய முக்கியச் செய்தி!இருவரும் அப்போது காங்கிரசுகாரர்கள்தாம். ஆனால், இருவரும் வெவ்வேறு காரணத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஏன் அடைக்கப்பட்டனர்? அவற்றையும் நாம் அறிய வேண்டுமன்றோ! 19-7-1928 அன்று நாகை ரயில்வே வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.நாகப்பட்டினம், போத்தனூர் ஆகிய ஊர்களிலுள்ள ரயில்வே பணிமனைகளில் ஆட்குறைப்பும், பழிவாங்கல் நடவடிக்கையும் நடந்து கொண்டிருந்தன. மேலும், நாகை, போத்தனூரிலுள்ள பணிமனைகளைப் பொன்மலைக்கு மாற்றவும், பணித் தேர்வு என்ற முறையில் தொழிலாளர் களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் நிருவாகம் செயல்பட்டுக்கொண்டிருந்தது. இவற்றை எதிர்த்தே அன்று வேலை நிறுத்தம் தொடங்கியது. தமிழகத்தைக் குலுக்கிய மூன்று பெரும் வேலை நிறுத்தங்களுள் இதுவொன்று. அவற்றுள் முதலாவது பி அண்டு சி மில் போராட்டமாகும். அப்போராட்டம் ஆய்வாளர்களால் மாபெரும் ஆலைப் போராட்டம் என்று அழைக்கப்பட்டது. இரண்டாவது, ‘பர்மா செல்’ எண்ணைக் கம்பெனி போராட்டமாகும். மூன்றாவது நாகை ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டமாகும். அந்தப் போராட்டத்துக்குப் பொதுமக்களும் பங்கேற்று ஆதரவு அளித்தனர். அதனால், அது தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தப் போராட்டம் என்றும் அழைக்கப்பட்டது.அப்போராட்டத்திற்கு முன்பு, வங்காளத்திலுள்ள கரக்பூரில் தொழிலாளர் ஆட்குறைப்பை முன்னிட்டு 19.2.1927-இல் பெரும் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. அப்போராட்டத்தை முகுந்தலால் சர்க்கார் தலைமையேற்று நடத்தினார். அப்போராட்டம் வங்காளத்தையே உலுக்கியது. அந்தப் போராட்டத்திலும் சிங்காரவேலர் வங்காளத்துக்குச் சென்று முகுந்தலால் சர்க்காருடன் சேர்ந்து போராடியுள்ளார். அந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட விழிப்பு, நாகைத் தொழிலாளர்களிடையே நல்ல ஒற்றுமையை ஏற்படுத்தியது. இப்போராட்டத்தினால் தமிழக ரயில்வே துறையே நிலை குலைந்தது. இதனால், அன்றைய அந்நிய அரசு சிங்காரவேலர், முகுந்தலால் சர்க்கார், பெருமாள் ஆகியோருடன் தொழிலாளர் பலரையும் கைது செய்தது.இந்தப்போராட்டத்தில் சிங்காரவேலரும், முகுந்தலால் சர்க்காரும் சதி செய்தனரென்று 10 ஆண்டுக்கடுங்காவல் தண்டனையை அவர்களுக்கு விதித்தது அன்றைய கொடுங்கோல் அரசு. அந்தத் தண்டனையால்தான் சிங்காரவேலர் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டார். 1930-ஆம் ஆண்டில், உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் இராஜாஜியும், ஜமதக்னியும் மற்றும் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.இராஜாஜியும், ஜமதக்னியும் இன்னும் சிலரும் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டனர். சிங்காரவேலர் இருந்த அறைக்குப் பக்கத்து அறையில் இராஜாஜி இருந்தார். சிறையில் ஜமதக்னி, இராஜாஜியைக் காண அடிக்கடி வருவார். தம்மைச் சந்தித்த அவரிடம் இராஜாஜி மிக்க கவனத்துடன் “பக்கத்து அறையில் ஒரு கிழவர் உள்ளார். அவரை எக்காரணம் கொண்டும் சந்திக்க வேண்டாம். சந்தித்தால் அந்தக் கிழவர் உனக்கு விஷத்தை ஊட்டிவிடுவார்; ஜாக்கிரதை” என்று கூறியுள்ளார். ஒரு நாள், ஜமதக்னி, “கிழவரைச் சந்திப்போம்; என்னதான் நடக்கிறது பார்ப்போம்” எனக் கருதிச் சிங்காரவேலரைச் சந்தித்துள்ளார். சிங்காரவேலரின் பண்பு அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால், அவரை அடிக்கடிச் சந்திக்கலானார். இந்தப் பழக்கத்தால் சிங்காரவேலர் ஜமதக்னிக்குப் பலமாதங்கள் மார்க்சியத்தைப் போதித்துள்ளார். சிங்காரவேலர் அவர் நெஞ்சில் அன்று விதைத்த மார்க்சிய விதை பிற்காலத்தில் மரமாக வேரூன்றிவிட்டது.இந்தப் பழக்கத்திற்குப்பின் ஜமதக்னி பையப் பைய மார்க்சியராக மாறிக்கொண்டிருந்தார். சிறையில் சிங்காரவேலர் இராஜாஜி கூறியதைப் போன்று ஜமதக்னிக்கு விஷத்தை ஊட்டவில்லை; விஞ்ஞானத்தைத்தான் ஊட்டினார். அந்த விஞ்ஞான உணர்வு ஜமதக்னியின் வாழ்வு முழுவதும் வியாபித்திருந்தது. சிங்காரவேலரின் நட்பால் பிற்காலத்தில், அதாவது 1938-இல் காங்கிரஸ் சோசிலிஸ்ட் கட்சியில் உறுப்பினராகிப் பின்பு வடார்க்காடு மாவட்டத்திற்குப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார். அக்காலத்தில் மூத்த தோழர் ப. ஜீவாவோடு இணைந்து அக்கட்சி வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தார்.ஜமதக்னி நாட்டையும் மொழியையும் இரு கண்களென ஓம்பியவர். சுதந்திரப் போராட்டக்காலத்தில் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று 9 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்தவர். நாட்டுக்குத் தொண்டாற்றியதைப் போன்றே அவர் மொழிக்கும், பொதுவுடைமைக் கொள்கைக்கும் தொண்டாற்றியுள்ளார். அக்காலத்தில்தான் அவர், மார்க்சியம் அல்லது சமூக மாறுதலின் விஞ்ஞானம், “இந்தியாவில் சோசலிசம்”, நீ ஏன் சோசலிஸ்ட் - ஆனாய்? “அபேதவாதப் பாட்டுகள்” ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.அவர் எழுதிய “மார்க்சியம் அல்லது சமூக மாறுதலின் விஞ்ஞானம்” என்ற நூலைக் குறித்துக் கல்கி அவர்கள் ஆனந்தவிகடனில், “பல நுணுக்கங்களை ஆய்ந்து சோசலிசத்தைப் பற்றி நூல் எழுதியிருக்கிறார்” என்று பாராட்டியுள்ளார். கல்கி பாராட்டியிருப்பதைக் கொண்டே அந்நூலின் பெருமையை உணரலாம். சிங்காரவேலர் மார்க்சியத்தை மட்டுமன்றி, அறிவியல், உளவியல் போன்ற நூல்களைப் பற்றியும் எண்ணற்ற கட்டுரைகளை வரைந்துள்ளார். குறிப்பாக டார்வினின் உயிர்களின் தோற்றம், ஈன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு, லாப்லசின் வெண்மேக சித்தாந்தம் போன்றவை குறித்து அவர் அக்காலத்திலேயே எழுதியுள்ளார்.அவையெல்லாம் அவரது இறப்புக்குப் பின்னர், “தத்துவமும், வாழ்வும்”, “தத்துவஞான - விஞ்ஞான குறிப்புகள்”, “வாழ்வு உயர வழி” என்ற நூல்களாக வெளிவந்துள்ளன. மற்றும், மக்களிடத்தில் அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டுமென்பதற்காகவே அவர் புது உலகம் என்ற மாத இருவார இதழைத் தொடங்கி, பல அறிவியல் கட்டுரைகளை எழுதி வரலானார். அவ்விதழில் விஞ்ஞான மேதைகளையும் அறிமுகப்படுத்தினார்.சிங்காரவேலரைப் போன்றே ஜமதக்னியும் “உயிர்களின் தோற்றம்”, “பூமியின் வரலாறு” ஆகிய அறிவியல் நூல்களையும் படைத்தார். ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்தபோது தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்நூல்களுக்குப் பரிசாக ரூ.500 வழங்கிச் சிறப்பித்தது இங்குக் குறிப்பிடத்தக்கது. ஜமதக்னி ஆற்றிய எழுத்துப் பணியில் சிகரமாகத் திகழ்வது, கார்ல்மார்க்சின் மூலதனத்தைத் தமிழில் மொழிபெயர்த்ததேயாகும். மூலதனம் என்ற நூல், அரசியல், பொருளாதாரம், தத்துவம் ஆகியவற்றின் அரிய கலப்பு அதனை மொழிபெயர்ப்பது எளிதன்று.அதற்கு வெறும் மொழியறிவு மட்டும் போதுமானதன்று பொருளாதாரம், தத்துவம் ஆகியவற்றில் நல்ல தேர்ச்சியும் இருக்க வேண்டும். இவற்றோடு ஆழ்ந்த ஈடுபாடும், கடும் உழைப்பும் தேவை; இவையெல்லாம் ஒருசேர இருந்தால்தான் மூலதனத்தை மொழிபெயர்க்க முடியும். இவற்றோடு எம்மொழியில் பெயர்க்கிறோமோ, அம்மொழியிலும் நல்ல அனுபவம் வேண்டும். இவை இருந்தால்தான் அம்மொழிபெயர்ப்பு சாத்தியம். மூலதனத்தை மொழிபெயர்ப்பதென்பது வாழ்நாள் பணியாகும். அதனைச் செய்து முடிப்பதென்பது வாழ்வின் வெற்றிப் பயணமாகும்.மூலதன மொழி பெயர்ப்புப் பணி ஒரு குழுவாக இருந்து செய்யப்பட வேண்டிய பணியாகும். ஒருவர் செய்வதென்பது எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதைக் காட்டிலும் கடினமானது. அத்தகு அரிய பணியைத் தம் 75-ஆம் அகவையில் (1978) தொடங்கி 79-ஆம் அகவையில் (1981) நிறைவு செய்திருக்கிறாரெனில், அவர்தம் முயற்சியும், உழைப்பும், உறுதியும் எத்துணை சிறந்தது என்பதை நன்கு உணரலாம். சோர்வும், அசதியும் நோயும் அப்போதப்போது வருத்தும் முதிர்ந்த வயதில், ஓய்வெடுக்கும் வயதில், அப்பணியை அவர் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறாரெனில் அது விந்தைதானே! அவர்தம் ஆழ்ந்த சமூக அக்கறையை யன்றோ அது காட்டுகிறது! என்னை அவர்தம் உழைப்பு; என்னே அவர்தம் சமூக அக்கறை! பெரியவர் ஜமதக்னின் அரும் உழைப்பை எண்ணுங்காலை வள்ளுவனாரின்அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும் - 611என்ற குறட்பாதான் நினைவுக்கு வருகிறது.இக்குறட்பாவுக்கு ஜமதக்னியின் அரிய பணி ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். மூலதனத்தை மொழியாக்கம் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு இடையிடையே அயர்வும் அசதியும் ஏற்பட்டிருக்கின்றன. அப்படி ஏற்படுவது இயற்கையே. ஆய்வுப் பணியிலும், மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபடுவோருக்கு அப்படி ஏற்படுவது இயல்பானதேயாகும். ஆனால், சோர்ந்து விடக்கூடாது. ஜமதக்னியும் சோர்ந்து விடவில்லை இவ்வேளையில் மூலதனத்தை எழுதி முடித்தபோது மாமேதை மார்க்ஸ் கூறியது நினைவு கூரத்தக்கது.“என்னுடைய வாழ்க்கைப் பணியான மூலதனத்தை எழுதுவதற்காக எனது உடல்நலத்தை, மகிழ்ச்சியை, குடும்ப நலத்தை நான் தியாகம் செய்தேன்” என்றார். அந்த மூலதனத்தை மொழியாக்கம் செய்த ஜமதக்னிக்கும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. எவ்வளவோ கஷ்டப்பட்டிருந்தும் அவர் தம்முடைய கஷ்டத்தை யாரிடமும் கூறியதில்லை. ஒரு சிறு நூலை மொழிபெயர்த்தாலே, தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இவ்வுலகில், பொருளாலும், அளவாலும், உலகத்தின் மாபெரும் படைப்பான மூலதனத்தை மொழிபெயர்த்ததில் அவர் சிறிதும் செருக்குக் கொண்டார் அல்லர்; இளமையிலேயே அண்ணல் காந்தியடிகளின்பால் அவர் ஈடுபாடு கொண்டிருந்ததால், அவருக்கு அந்த வீண்பெருமை இல்லாது போயிற்று எனலாம்.மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது சில நேரங்களில் அவர் மிகுந்த தளர்ச்சியுடன் இருந்துள்ளார். அதனை நண்பர்கள் கண்டு சற்று வருந்தி, பணியைச் சற்று நிறுத்தி ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு வேண்டியுள்ளனர். அதற்கு அவர் இசையாமல் விடை பகர்ந்துள்ளார். அது நம் சிந்தனைக்கு உரியது.“விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் சிறையில் கழித்தேன். இந்தியா விடுதலை பெற்றது. அப்போராட்டத்தில் சிறை புகுந்தபோது பொதுவுடைமைச் சிற்பியான சிங்காரவேலரைச் சந்தித்தேன் முதுமைப் பருவத்தில் காசநோயால் அவதியுற்ற சிங்காரவேலருக்குச் சிறையில் எல்லாப் பணிகளையும் செய்தேன். அப்போது, காங்கிரசு இயக்கத் தலைவர்கள் “சிங்காரவேலரிடம் பேசாதே; உனக்கு விஷத்தை (பொதுவுடைமை நெறியை) ஊட்டிவிடுவார்;” என்று கூறுவார்கள்.பொதுவுடைமைச் சிற்பி, தனக்குத் தரப்பட்ட மாமிச உணவை எனக்கு அன்புடன் அளிப்பார். அறிவுப்பசிக்கு மார்க்சிய உணவை ஊட்டினார்; எனவே வாழ்நாள் முடிவதற்குள் கார்ல்மார்க்சின் மூலதனத்தைத் தமிழ்கூறும் நல்லுலகத்திற்குத் தருவது எனது தலையாய கடமையாகும்”இக்கருத்தை நோக்கினால் அவரது துணிவையும், சமூக அக்கறையையும், தன்னல மறுப்பையும் தெளிவாக உணரலாம். ஆம், இந்தப் பண்பைக் கொண்ட மாமனிதர்தான் ஜமதக்னி. 75-வயதுக்கு மேற்பட்டிருந்தும், நண்பர்கள் அக்கறையோடு கூறியும், அவர் அதனை மறுத்திருக்கிறாரெனில், அவரது கடமையுணர்வு எத்துணை பெரிது என்பதை உணரலாம்.“கருமம் சிதையாது கண்ணோட வல்லார்” 578 என வள்ளுவனார் கூறுவது, அப்பெரியாருக்கும் பொருந்தும்; தமது 75-வயதில் தொடங்கி 79-ஆம் வயதில் மொழிபெயர்ப்புப் பணியை நிறைவு செய்துள்ளார். நான்கு ஆண்டுகளில் 10,000 பக்கங்களில் மூலதனத்தையும், மிகைமதிப்புக் கோட்பாட்டையும் மொழியாக்கம் செய்துள்ளார். மூலதன நூலை நான்காண்டுகளில், அதுவும் ஒருவரால் மொழியாக்கம் செய்வது அரிதினும் அரிதாகும். நான்காண்டுகளில் 10,000 பக்கங்கள் என்றால் ஆண்டிற்கு 2500 பக்கங்களை மொழிபெயர்த்துள்ளார். மூலதனம் போன்ற அரசியல் பொருளாதார நூலை ஆண்டிற்கு 1800 பக்கங்களை மட்டுமே மொழிபெயர்க்க முடியும். ஆனால், அப்பெரியாரோ ஆண்டிற்கு 2500 பக்கங்களை மொழி பெயர்த்தது அவரது விவேகத்தைக் காட்டுகிறது. அதே வேளையில் அவரது அறிவு வேகத்தையும் காட்டுகிறது. அதுவும் அப்பணியை 74-வயதுக்கு மேல் செய்துள்ளார். பெரும் சாதனைதான்.தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கங்கள் இருந்தும், பல்லாண்டுகளாக அவை செய்யாத பணியை அவர் செய்து முடித்துள்ளார். எந்தப் பயனையும் எதிர்நோக்காமல், தமிழின்பாலும், மார்க்சியக் கொள்கையாலும் கொண்ட ஆழ்ந்த பற்றே அவரைத் தூண்டியுள்ளது. இவற்றிற்குச் சிங்காரவேலரின் சிந்தனையும், பழக்கமும் உள்ளாற்றலாக இருந்து இயக்கியுள்ளன. அதனால்தான் அவர் “சிங்காரவேலர் என் அறிவுப் பசிக்கு மார்க்சிய உணவை ஊட்டினார்; எனவே வாழ்நாள் முடிவதற்குள் கார்ல்மார்க்சின் மூலதனத்தைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குத் தருவது எனது தலையாய கடமையாகும்” என்றார். இதிலிருந்த சிங்காரவேலரின் சிந்தனையும், நட்பும், அவரை எவ்வாறு தூண்டியுள்ளன என்பதையும் அவை எவ்வாறு உறுதி தந்துள்ளன என்பதையும் நன்கு உணரலாம்.சிங்காரவேலருடன் அவர் கொண்ட நட்புதான், அரும் பெரும் அறிவுக்களஞ்சியமும், உலகத்தை மாற்றும் நூலும், சமூகத்தில் சமத்துவத்தைக் கொணரும் பனுவலுமான மூலதனத்தை நம் தமிழகத்துக்கு அளித்தது எனலாம். மூலதனத்தைத் தமிழில் பெற்றமைக்காகத் தமிழகம் அவருக்குப் பெரிதும் கடன்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமன்றி பொதுவுடைமை உலகமே அப்பெருமகனுக்குக் கடமைப்பட்டுள்ளது. மார்க்ஸ் எழுதிய மூலதனத்தின் இரண்டாம், மூன்றாம் தொகுதிகளை அவரது மறைவுக்குப்பின் அரும்பாடுபட்டு அவற்றை வெளியிட்ட ஏங்கெல்ஸ் போன்று, ஜமதக்னியின் மூலதன மொழிபெயர்ப்பை அவரது மறைவுக்குப் பின் ஆறு தொகுதிகளாக வெளியிட்ட பெருமை பேராசிரியர் மு. நாகநாதன் அவர்களுக்கு உரித்து. மூலதனத்தை அரிய - அழகிய பதிப்பாக அவர் வெளியிட்டதன் வாயிலாக அவருடைய மாமனாருக்கு மட்டுமேயன்றி மார்க்சிய உலகத்திற்கே பெருமை சேர்த்துவிட்டார். இந்தப் பெரும்பணிக்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். காலத்தினாற்செய்த இப்பணி “ஞாலத்தின் மாணப்பெரிது” எனலாம்.இங்கு இன்னொருவருக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். மூலதனத்தின் 10,000 பக்க மொழிபெயர்ப்பை நன்முறையில் வெளியிட வேண்டுமென்றால், அதற்கு மிகுந்த பொருட்செலவாகும். தனியொருவரால் அதனைச் செய்ய முடியாது. இந்தச் செலவுக்காகப் பேராசிரியர் மு. நாகநாதன் பலநிலைகளில் முயன்றிருக்கிறார். நடுவண் அரசின் உதவியைக்கூட அவர் நாடியிருக்கிறார். ஆனால், இறுதியில் அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர், கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்தான், தமிழக நிதிநிலை அறிக்கையில் (1998-99) அந்நூலை வெளிக்கொணர ரூபாய் ஐந்து லட்சத்தை ஒதுக்கினார். தமிழக முதல்வர் இந்த நூல் வெளிவருதிலும் முதல்வராகிவிட்டார். மாண்புமிகு கலைஞரின் இந்த உதவி கிடைத்திராவிடில், மூலதனம் இவ்வளவு விரைவில் வெளிவந்திருப்பது மிகக் கடினம். மாண்புமிகு கலைஞரின் இந்த அரிய உதவிக்குத் தமிழகமும், முற்போக்கு உலகமும் எஞ்ஞான்றும் கடமைபட்டுள்ளன. பொதுவுடைமை இயக்கத்துக்கும், மார்க்சிய நூல்களுக்கும் எந்த அந்நிய அரசு கடுந்தடையை விதித்ததோ, அந்த அந்நிய அரசே (இருவரையும் சிறையில் அடைத்ததன் மூலம்) மூலதனம் வெளிவருவதற்கு மறைமுகக் காரணமாகிவிட்டது.சிந்தனைச் சிற்பி சிங்காரவேலருக்கும், ஜமதக்னிக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. அவற்றை ஓரளவு நோக்குவது சிந்தனைக்கு இன்பம் பயப்பதாகும். மார்க்ஸ் தமது அரிய படைப்பான மூலதனத்தின் அச்சுப்படியை 16-8-1867 அன்று இரவு 2 மணிக்கு நிறைவு செய்து ஓய்வு எடுத்தார். அதே மார்க்ஸ் 14-3-1883 இரவு 2 மணிக்குத் தாம் சிந்திப்பதை நிறுத்தி நிரந்தர ஓய்வில் மூழ்கிவிட்டார். இரவு 2 மணி அவர் வாழ்க்கையில் மறக்க முடியாதது. இதனைப்போன்ற சிங்காரவேலருக்கும், ஜமதக்னிக்கும் இடையே சில மறக்கமுடியாத ஒற்றுமையான நிகழ்வுகள் உள்ளன. அவற்றையும் நோக்க வேண்டுமன்றோ!தமிழகத்தில் முதன்முதலில் மார்க்சியத்தை விதைத்த முன்னோடி சிங்காரவேலர்; அவரைப் போன்றே தமிழகத்தில் மூலதனத்தைத் தமிழில் முதலில் தந்தவர் ஜமதக்னி ஆவார். சிங்காரவேலர் மார்க்சியத்தை மட்டுமன்றி அறிவியல் சிந்தனைகளைப் பரப்புவதிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அக்காலத்திலேயே உயிர்களின் தோற்றம் குறித்துப் பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். ஜமதக்னியும் உயிர்களின் தோற்றம் எனுந்தலைப்பில் ஒரு நூலையே எழுதியுள்ளார்.சிங்காரவேலர் அக்காலத்திலேயே “கடவுளும் பிரபஞ்சமும்” என்ற நூலை எழுதினார்; ஜமதக்னியும் “பிரபஞ்ச வரலாறு” எனுந் தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார். சிங்காரவேலர் பொதுவுடைமைக் கொள்கையின் முக்கியத்துவம் குறித்து, “பொதுவுடைமை இயக்கத்தில் ஏன் சேரவேண்டும்? என்ற கட்டுரை எழுதினார். ஜமதக்னியும் பிற்காலத்தில் “நீ ஏன் சோசலிஸ்ட் ஆனாய்” எனுங்கட்டுரை எழுதியுள்ளார்.சிங்காரவேலர் அந்நாளிலேயே மார்க்சியம் குறித்துப் “பொதுவுடைமை விளக்கம்” எனும் நூலை வரைந்தார். பின்னாளில் ஜமதக்னியும் “மார்க்சியம் - அல்லது சமூக மாறுதலின் வரலாறு” எனும் நூலை வரைந்துள்ளார். இவர்களிருவரும் தேசிய இயக்கத்திலிருந்து பொதுவுடைமையாளர்களாக மாறியவர்கள்; இருவரும் தத்தம் வாழ்நாள் இறுதிவரை கதராடை அணிவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.மார்க்ஸ் தம் வாழ்நாள் இறுதிவரை சிந்தித்துக் கொண்டும், எழுதிக்கொண்டும் இருந்தார். மார்க்ஸ் மறைந்தபோது அவருடைய நண்பர் ஏங்கெல்ஸ், மார்க்சின் மறைவைக் குறிப்பிடும்போது “அவர் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்” என்று அருமையாக இலக்கிய நயம்பட கூறினார். சிங்காரவேலருக்கு, காசநோயும் பக்கவாதமும், முதுமையும் பல நேரங்களில் துன்புறுத்திய போதும், இறுதிவரை எழுதிக்கொண்டே இருந்தார். மூலதனத்தை மொழிபெயர்த்த பின்னர், பெருங்கடமை முடிந்துவிட்டதென ஜமதக்னி வாளா கிடக்காமல் வாழ்நாள் இறுதிவரை எழுதிக்கொண்டே இருந்தார்.மூலதனத்தை மொழி பெயர்த்ததன் வாயிலாக ஜமதக்னி சிங்காரவேலருக்கும், தமிழகத்துக்கும் நன்றி காட்டிவிட்டார்; கைம்மாறு கருதாது நாட்டுக்கும் மொழிக்கும் அரும்பணியாற்றிய பெருந்தகை ஜமதக்னிக்கு நாம் எப்படி நன்றி காட்டப்போகிறோம்? “நன்றி மறப்பது நன்றன்று” அன்றோ!“If we have chosen the position in life in which we can most of all work for mankind, No burdens can bow us down, because they are sacrifies for the benefit of all” Karlmarx.“மனித குலத்தின் நன்மைக்காக நாம் சிறப்பாகப் பாடுபடுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்து விட்டால், அதன் எந்தச் சுமையும் நம்மை அழுத்த முடியாது. ஏனென்றால், அது எல்லோருடைய நன்மைக்காகவும் செய்யப்படுகிற தியாகம்”(கட்டுரையாளர், தமிழ் ஆய்வாளர், ஜமதக்னியின் மாணவர்).
Labels: சிங்காரவேலர், ஜமதக்னி