சிந்தனை சிற்பி சிங்காரவேலர்

தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் ம. சிங்காரவேலர். இந்தியாவில் மே தினத்தை முதல் முதலில் கொண்டாடியவர் சிங்காரவேலர். மாபெரும் சுதந்திரப்போராட்ட வீரர்.

Thursday, February 19, 2009

தியாகங்களுக்குத் துணிவோம்! சோசலிசம் படைப்போம்!


  சிங்காரவேலர் பிறந்த நாள் விழாவில் சங்கரய்யா பேச்சு

சென்னை, பிப்.18-

“தியாகங்களின்றி, இழப்புகளின்றி, போராட் டங்களின்றி சமத்துவ சமுதாயம் மலராது என்று தெளிவாகக் கூறிச்சென்றார் சிங்காரவேலர். அந்த வழிகாட்டலை ஏற்று தியாகங்களுக்கும் இழப்புகளுக்கும் தயாராவோம், சோசலிசத்தை நிலைநாட்டப் போராடுவோம்,” என்று விடுதலைப்போராட்ட வீரர் என். சங்கரய்யா அறை கூவல் விடுத்தார். உருவாக்க வேண்டியது சிங்காரச் சென்னை அல்ல, சிங்காரவேலரின் சென்னையைத்தான் என்றார் அவர்.


சென்னைப் பல்கலைக் கழக பவள விழா அரங்கில் புதனன்று (பிப்.18) சிங்கார வேலர் 150வது ஆண்டுப் பிறந்தநாள் விழாவும், சிங்காரவேலர் சிந்தனைக்கழக அறக்கட்டளைச் சொற் பொழிவு தொடக்க நிகழ்வும் நடைபெற்றன. அறக் கட்டளையும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையும் இணைந்து நடத்திய இந்த விழாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் என்.சங்கரய்யா தொடங்கிவைத்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு காலகட்டங்களில் சிங்காரவேலரின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்த அவர், குறிப்பாக 1918 முதல் 1933 வரையிலான 15 ஆண்டுகளில் அவர் தீவிர அரசியல் இயக்கத்தில் செயல் முனைப்புடன் ஈடுபட்டதை எடுத்துரைத்தார். தென்னிந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்திற்கு வித்தூன்றிய சிங்காரவேலர் இந்தியாவில் இயக்க முன்னோடிகளான முசாபர் அகமது, டாங்கே, எச்.வி. காட்டே ஆகியோரு டன் இணைந்து பணியாற் றியதைக் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது;

முதலாளிகள் கேள்வி


1933ல் நாத்திக மாநாட்டில் கடைசியாக உரையாற்றினார் சிங்காரவேலர். பின்னர் உடல் நலம் குன்றியதால் நடமாட்டம் குறைந்தது. அந்த நிலையிலும் திரு.வி.க. தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டுவதற்கு உதவினார். தொழிலாளர்களுக்கு அரசியல் வகுப்புகள் நடத்தி வர்க்க உணர்வை போதித் தார். தொழிலாளர் பிரதிநிதி களைச் சந்திக்கும் ஆலை முதலாளிகள், “ஏன் உங்கள் கூட்டங்களுக்கு சிங்காரவேலரை அழைத்து வருகிறீர்கள்,” என்று கேட்கிற அளவுக்கு போராட்டச் சிந்தனைகளை வளர்த்தார்.

1923ல் தொழிலாளர் விவசாயிகள் கட்சியைத் தொடங்கினார். ‘லேபர் கெசட்’ பத்திரிகையை ஆரம் பித்தார். இந்தியத் தொழி லாளர்கள் இன்று மேதினத் தைக் கொண்டாடுகிறார்கள், அதை முதன் முதலில் இந்தியாவில் கொண்டாடி யவர் சிங்காரவேலர்தான். 1924ல் பிரிட்டிஷ் அரசு கான்பூர் சதிவழக்கில் அவரையும் சேர்த்து சிறையில் அடைத்தது.

அகிலத்தோடு ஆழ்ந்த தொடர்பு

மீனவர் குடும்பத்தில் பிறந்து பலதுறை ஈடுபாடுகளுடன் அனுபவச் செறிவோடு உயர்ந்தவர் சிங்காரவேலர். 

லெனின் தலைமையில் செயல்பட்ட மூன்றாம் அகிலம் அமைப்புடன் ஆழ்ந்த தொடர்புகள் கொண்டிருந்தார். அகிலத்தின் படிப்பினையோடு, கீழைநாடுகளில் உழைப்பாளி மக்களைத் திரட்டும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. தென் னிந்தியாவில் அந்த முயற்சியில் ஈடுபட்டவர்தான் சிங்காரவேலர். அதை யொட்டி பிரிட்டன் கம்யூனிஸ்ட் தலைவர் சக்லத் வாலா-வை சென்னைக்கு வரவழைத்து ஐந்து கூட்டங்கள் நடத்தினார். அப் படியொரு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சத்ய மூர்த்தியை கலந்துகொள்ளச் செய்தார்.

1925ல் கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு சிங்காரவேலர் தலைமை யில்தான் நடந்தது. அதில் அவர் நிகழ்த்திய தலைமையுரை இப்போதும் வழிகாட்டும் ஆவணமாகத் திகழ்கிறது. வங்காளம்-நாக்பூர் ரயில்வே தொழிலாளர் போராட்டத்துக்குத் தலை மை தாங்கிய சிங்காரவேலர், பின்னர் 1928ல் தமிழ்நாட்டில் ரயில்வே தொழிலாளர்களைத் திரட்டி நடத்திய போராட்டம், நாட்டின் விடுதலை இயக்கத்திற்கே ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

அன்று கம்யூனிஸ்ட்டு கள் மேற்கொண்ட முடிவுப் படி காங்கிரசில் இணைந்து பணியாற்றிய சிங்கார வேலர், பின்னர் 1945ல் காங் கிரசிலிருந்து ஜீவா, பி. சுந் தரய்யா, பி. சீனிவாசராவ், பி. ராமமூர்த்தி உள்ளிட்ட கம் யூனிஸ்ட்டுகளோடு தாமும் சேர்ந்து வெளியேறினார். 1932-34 காலகட்டத்தில் பெரியாரின் குடியரசு, பகுத் தறிவு பத்திரிகைகளில் எழுதி பெண்விடுதலை, தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் எதிர்ப்பு ஆகிய சிந்தனை களைப் பரப்பினார். சமூக சீர்திருத்தத்திற்கு அடிப் படை பொருளாதார மாற் றம்தான் என்பதையும் வலி யுறுத்தினார். 1946ல் கால மாகும் வரையில் அவரு டைய இத்தகைய பணிகள் தொடர்ந்தன.

ஆய்வாளர்கள் பொறுப்பு

சிங்காரவேலர் வரலாற் றை இன்னும் முழுமையா கக் கொண்டுவருகிற பொறுப்பு ஆய்வாளர்க ளுக்கு இருக்கிறது. நாகை கே. முருகேசன், ஏ.எஸ்.கே. அய்யங்கார் போன்றோரது வரலாறுகளையும் பதிவு செய்ய வேண்டும். இன்றைய நிலைமைகளில் மக்கள் இயக்கத்தைக் கட்டி வளர்க்க அந்த வரலாறுகள் உதவும்.

உலகமே இன்று பொருளாதாரச் சரிவை சந்தித் துக்கொண்டிருக்கிறது. எந்த சீனா அழிந்துவிடும் என் றார்களோ அந்த சீனா உல கமே வியக்க இன்றைய நெருக்கடியின் பாதிப்புகளிலிருந்து தப்பித்து தலை நிமிர்ந்து நிற்கிறது. சீனாவில் கடைப்பிடிக்கப்படுவது போன்ற பொருளாதாரமே உலகை விடுவிக்கும் என்று முதலாளித்துவ ஆய்வாளர்களே கூட சொல்கிறார்கள்.

திட்டவட்ட அணுகுமுறை

மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிப்பார்கள் என்று முன்பு காங்கிரஸ்காரர்கள் எங்களை கேலிசெய்ததுண்டு. அது ஒரு சித்தாந்த பந்தம் தான். திட்டவட்டமான நிலைமை களுக்கு ஏற்ப திட்டவட்டமான அணுகு முறைகள் என்பதே மார்க்சியம். அந்த அணுகுமுறை யால்தான் சீனா இதைச் சாதித்திருக் கிறது.

இந்தியாவில் கம்யூ னிஸ்ட்டுகள் ஏற்படுத்த விரும்புகிற சோசலிச அமைப்பு என்பது ரஷ்யாவையோ, சீனாவையோ நகலெடுத்ததாக - ஸ்டீரியோ டைப்பாக - இருக்காது. அது இந்திய மண்ணுக்கேற்ற இந்திய சோசலிசமாகவே இருக்கும்.

மூன்றாவது அணி

இந்தியாவின் திட்ட வட்ட நிலைமைகளுக் கேற்ற திட்டவட்டமான அணுகுமுறை என்ற அடிப்படையிலேயே இடதுசாரி கள் இன்று மூன்றாவது பாதையைக் காட்டுகிறோம். பாரதி சொன்னது போல் ‘கோலப் பொதுவுடைமை’ - அதாவது கரடுமுரடான பொதுவுடைமை அல்ல, அழகான பொதுவுடைமையை - ஒப்பிலாத நம் சமுதா யத்தை அடைய அந்த மூன்றாவது பாதைதான் வழி.

புரட்சிக் கவி பாரதிதாசன், சிங்காரவேலர் பற்றி எழுதிய கவிதையில் “பொது வுடைமைக்கு ஏகுக அவன் பின்னாடி” என்று முடித்தி ருப்பார். சிங்காரவேலர் வகுத்த பாதையில் நடை போடுவோம், பொதுவுடை மைச் சமுதாயத்தை இங்கே நிலைநாட்டுவோம்.

இவ்வாறு சங்கரய்யா பேசினார்.

Labels: , ,

0 Comments:

Post a Comment

<< Home